Gmail சேவை நிறுத்தப்படுவதாக எழுந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கூகுள்!
கூகுளின் தயாரிப்பான ஜி-மெயில் சேவை நிறுத்தப்படுவதாக எழுந்த தகவல்கள் வதந்தி என கூகுள் தெளிவுப்படுத்தியுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பான ஜி-மெயில் தகவல்களை அனுப்ப,பெற, சேமிக்க மற்றும் பெரிய கோப்புகளை அனுப்ப மற்றும் பெற என பல விதங்களில் உதவுகிறது. அலுவல் ரீதியாக தனிநபர் மற்றும் அலுவலங்களுக்கு பேருதவியாக இருப்பது ஜி மெயில். இந்நிலையில், 'Google is sunsetting Gmail' என்ற தலைப்பில் கூகுள் ஜி மெயிலை மூடப்போவதாக தகவல்கள் வெளியாகின. இதனால் எந்த தகவல்களையும் அனுப்ப,பெற, சேமிக்க முடியாது எனவும் ஜி- மெயிலின் எந்த சேவைகளையும் பெற இயலாது எனவும் தகவல்கள் பரவியது.
அதோடு, ஜி மெயிலின் சேவைகள் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறுத்தப்படும் என தகவல்கள் வெளியாகின. இந்த தகவலால் ஜி- மெயில் பயனர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இந்த பதிவு 4 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களையும் கடந்துள்ளது. இந்நிலையில், இதற்கு கூகுள் விளக்கம் அளித்துள்ளது. முன்பு இருந்த அடிப்படை அமைப்பை தற்போது மேம்படுத்தியுள்ளதாகவும், வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் விளக்கமளித்துள்ளது. ஜி மெயில் சேவை தொடரும் எனவும் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.