கூகுள் CEO சுந்தர் பிச்சை விரைவில் பதவி நீக்கம்?
ஜெமினி AI இமேஜ் ஜெனரேட்டரின் தோல்வி எதிரொலியாக, கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை பதவி விலக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தவர் சுந்தர் பிச்சை. தொழில்நுட்ப படிப்பில் ஆர்வம் கொண்ட இவர், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்ட படிப்பை நிறைவு செய்தார். பின்னர் 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த இவரின் தனித்துவமான திறமையையும், மாறுபட்ட வித்யாசமான சிந்தனையையும் கண்ட கூகிள் நிறுவனம், அதனை அங்கீகரிக்கும் வகையில் 2015-ம் ஆண்டு கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியில் அமர்த்தியது.
அதாவது, ஜெமினி சாட்பாட்டில் படங்களை தவறாக சித்தரிப்பதாக சமூக வலைத்தளங்களில் சில பயனர்கள் வெளியிட்டது பூதகரமாக மாறியது. இதன் மூலம் இந்த தொழில்நுட்பம் இன ரீதியான சண்டைகளை உருவாக்குகிறதா? என்ற சர்ச்சையான விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்தன. அப்போது கூகுள் நிறுவனம் சார்பில், “ஜெமினி சாட்பாட், வரலாற்று துருப்புகளை தவறாக சித்தரித்ததை நாங்கள் அறிவோம். அதற்காக மன்னிப்பும் கேட்கிறோம். இது முழுவதும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடைபெற்றுள்ளது” என கூறப்பட்டது.
இந்த AI தொழில்நுட்பம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை என்பதால், இதன் தாக்கத்தை சுந்தர் பிச்சை எதிர்கொள்ளக்கூடும் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கூகுள் நிறுவனத்தின் உயர் பதவியில் இருந்து அவரை மாற்றுவதற்கான குரல்கள் வளர்ந்துவருகின்றன. இந்த ஜெமினி AI இமேஜ் ஜெனரேட்டர் தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்த போதிலும், கூகுள் சமீபத்தில் இந்த செயலியை இடைநிறுத்தியது.