நீக்கப்பட்ட இந்திய செயலிகளை மீண்டும் பிளே ஸ்டோரில் சேர்க்க கூகுள் நிறுவனம் ஒப்புதல் - மத்திய அரசு தகவல்
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட இந்திய செயலிகளை மீண்டும் சேர்க்க கூகுள் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பெறும் செயலிகளிடம் இருந்து கூகுள் நிறுவனம் 11 முதல் 26 சதவீதம் வரை சேவை கட்டணம் வசூலித்து வருகிறது. இந்நிலையில் சேவை கட்டணத்தை செலுத்தவில்லை எனக் கூறி 10 இந்திய நிறுவனங்களின் செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் அதிரடியாக நீக்கியது.
இது தொடர்பாக கூகுள் நிறுவனம் அளித்த விளக்கத்தில், இந்த நிறுவனங்களுக்கு சுமார் 3 ஆண்டுகளுக்கு மேல் தவணை வழங்கியும், அவர்கள் செலுத்த வேண்டிய சேவை கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் 10 இந்திய செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
நீக்கப்பட்ட செயலிகளில் திருமண செயலி, வேலை தேடுவோருக்கான செயலி ஆகியவையும் அடங்கும். கூகுள் நிறுவனத்தின் இந்த திடீர் நடவடிக்கையால் லட்சக்கணக்கானோரின் வேலை மற்றும் வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகி இருப்பதாக பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மத்திய அரசுடன் கூகுள் நிறுவன பிரதிநிதிகளும், செயலிகளை உருவாக்கிய புத்தாக்க நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட இந்திய செயலிகளை மீண்டும் சேர்க்க கூகுள் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-
"கூகுள் நிறுவனம் அதன் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட இந்திய செயலிகளை மீண்டும் சேர்க்க ஒப்புக்கொண்டுள்ளது. கட்டண விவகாரத்தில் ஏற்பட்ட சிக்கலுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று நம்புகிறோம்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.