செம்ம வைப்... ரசிகர்களுக்கு பர்த்டே ட்ரீட் கொடுத்த ‘கூலி’ படக்குழு!
ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் வைப் ஆகும் வகையில் ‘கூலி’ படத்திலிருந்து சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கூலி’. லோகேஷ் இயக்கத்தில் இதுவரை வெளிவந்துள்ள அனைத்துப் படங்களுமே வெற்றிப் படங்களே. மேலும் அனைவரும் பெரிய நடிகர்கள். அந்த வரிசையில் தற்போது ரஜினியை வைத்து லோகேஷ் இயக்கி வருவதால் கூலி படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இப்படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின் ஷபீர், ஸ்ருதிஹாசன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படப்பிடிப்பு தொடங்கியது முதலே இப்படம் லோகேஷின் பிரபலமான LCU யுனிவர்சில் இடம்பெறுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் இது தனிக்கதை எனவும், இப்படம் LCUவில் இடம்பெறாது எனவும் லோகேஷ் கூறியுள்ளார். மேலும் கூலி திரைப்படத்தில் அமீர்கான் நடிப்பதாகவும், அந்த காட்சிகள் தற்போது ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் ரஜினிகாந்தின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பாடல் முன்னோட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த பாடலை டி. ராஜேந்தர் பாடியுள்ளார். இதில் ரஜினி குத்தாட்டம் ஆடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.