"பொருளாதார மேம்பாட்டையும், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வையும் தமிழ்நாடு அரசு இரு கண்களாக கருதுகிறது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பொருளாதார மேம்பாட்டையும், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வையும் இரு கண்களாக தமிழ்நாடு அரசு கருதுவதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான நிர்வாக குழுவின் இரண்டாவது கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரை ஆற்றினார்.
அப்போது காலநிலை மாற்றம் தான் மனித சமுதாயம் எதிர்கொள்ளக்கூடிய மாபெரும் சவால். கால நிலை மாற்றத்திற்காக அமைக்கப்பட்ட இந்த குழு தான் இந்தியாவிலேயே அமைக்கப்பட்ட முதல் குழு. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் காலநிலை மாற்றம் தொடர்பாக தமிழ்நாட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை 8.3 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது என்று பேசினார்.
தொடர்ந்து பேசியவர் நீண்ட கடற்கரையை பாதுகாக்க தமிழ்நாடு நெய்தல் மீட்பு இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் மூலமாக, ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு அலையாத்திக் காடுகள்', 'கடல் புற்கள்' மற்றும் பிற Critical Habitats உருவாக்குதல் மற்றும் மீட்டெடுத்தல் போன்ற முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் ரூ.500 கோடியில் ஊரகப் பகுதியில் 5,000 நீர்பாசனங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். 'மஞ்சப்பை' திட்டத்தால் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழியின் பயன்பாடு கணிசமாக குறைந்துள்ளது.சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் தமிழகம் இந்தியாவிலேயே 3-வது இடத்தில் உள்ள நிலையில் நீரேற்று நிலையங்களை மேம்படுத்த திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.
தொடர்ந்து பேசியவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 701 இயற்கை வள மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழக அரசு வெள்ள அபாயங்களை தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் தெரிவித்த அவர் திட்டத்தின் முதல் பகுதியாக, அடப்பாறு, ஹரிச்சந்திரா நதி, வெள்ளையாறு, பாண்டவையாறு, வளவனாறு, வேதாராண்ய கால்வாய் ஆகிய 6 ஆறுகள் மற்றும் 13 நீரேற்று நிலையங்களின் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதே போல் இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில், ஐந்தாவது பெருநகரமாக சென்னை இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் விரைவான நகரமயமாக்கலுக்கு ஏற்ப, இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில், C40 நகரங்களுக்கான கூட்டமைப்பில் சென்னை மாநகராட்சி இணைந்துள்ளது. நமக்கு பின் இந்த பூமியில் வாழப்போகும் குழந்தைகள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு கேடுகள் விளைவிக்காத உலகத்தை வழங்க நல்ல திட்டங்களை முன்னெடுத்து வெற்றி பெற்றோம் என்று வரலாறு சொல்ல வேண்டும் என்று கூறினார் .
மேலும் தமிழ்நாடு அரசை பொறுத்தவரைக்கும், பொருளாதார மேம்பாட்டையும்,
சுற்றுச்சூழல் பொறுப்புணர்வையும் இரு கண்களாக நினைத்து தொடர்ந்து செயலாற்றி
வருகிறது. அதற்காகதான், நீர்நிலைகள் மறுசீரமைப்பு, Climate-Resilient Cities
உருவாக்குவது, Biodiversity-யைப் பாதுகாக்குகிறது என்று முன்னெடுப்புகளை
எடுக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.