டெல்டா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. 90 அடியை எட்டியது மேட்டூர் அணை!
கர்நாடக அணைகளிலிருந்து தொடர்ச்சியாக நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியுள்ளது.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை 1925-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டு 1934ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 125 அடி உயரம் கொண்ட இந்த அணையில் பாதுகாப்பு கருதி 120 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையான மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர், டெல்டா மாவட்ட விவசாயத்தின் ஜீவாதாரமாக உள்ளது. கர்நாடகாவின் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர், சுரங்க மின்நிலையம் உள்ளிட்ட 3 இடங்கள் வாயிலாக வெளியேற்றப்படுகிறது. வழக்கமாக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி பாசனத்திற்காக நீர் திறந்துவிடப்படும். ஆனால் இந்த வருடம் திறந்துவிடப்படவில்லை. இதற்கு காரணம் மழை இல்லாததும், கர்நாடகா தண்ணீர் திறக்காததுமே ஆகும்.
இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 390 நாட்களுக்கு பிறகு 90 அடியை தொட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக முக்கிய அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்டவை நிரம்பின. இதனைத்தொடர்ந்து, உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
இன்று (ஜூலை 25) மாலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 28,856 கனஅடியாக இருந்தது. இந்நிலையில் தற்போது 28,856 கன அடியிலிருந்து 32,693 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 90.50 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 53.22 டிஎம்சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.