புதிய யுக்தியை கையாளும் தங்கக் கடத்தல் கும்பல்... விமான நிலையங்களுக்கு சுங்கத்துறை எச்சரிக்கை!
தங்கம் கடத்தும் கும்பலின் புதிய டெக்னிக் குறித்து விமான நிலையங்களுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கடத்தி வருவது சமீப காலமாக அதிகரித்துள்ளதால், சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டாலும், கடத்தல் தொடர்ந்தே வருகிறது. ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு புதிய யுக்தியை கையாண்டு தப்பியும் செல்கின்றனர்.
இந்நிலையில் விமான நிலையங்களுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், குறைந்த அளவு தங்கமாயினும், ஒருவர் எடுத்து வராமல் பலர் பகிர்ந்து எடுத்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் திடீரென ஒருவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது போலவோ அல்லது விமான நிலைய ஊழியரிடம் வாக்குவாதம் செய்தோ அவர்களை திசை திருப்புகிறார். இந்த இடைவேளையில் மற்றவர்கள் அங்கிருந்து தப்பிவிடுகின்றனர்.
துபாய், அபுதாபி, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து பெரிய விமானங்களில் ஏராளமான விமானிகள் ஒரே நேரத்தில் தரையிறங்கும்போது, அனைவரையும் முறையாக பரிசோதனை நடத்தி தங்கக் கடத்தலைக் கண்டுபிடிப்பது என்பது சவாலானது. இந்த சூழலில்தான் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 113 பயணிகள் துபாய் விமானத்திலிருந்து வந்தனர். அவர்கள் 13 கிலோ தங்கம், 500 செல்போன்கள் உள்ளிட்ட பொருள்களைக் கடத்தி வந்தனர். அது பறிமுதல் செய்யப்பட்டது. அது மட்டுமல்லாமல், சிறிய அளவிலான பொருள்களுடன் யாரேனும் சிக்கும் போது, அவர்கள் மீது முழு கவனமும் செலுத்தப்படும். அதே நேரத்தில் பெரிய கடத்தல் பொருள்களுடன் பலரும் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது.
எனவே, பயணிகளின் தரவுகளை ஆராய்ந்து, ஒவ்வொரு விமானத்திலும் அடிக்கடி பயணிக்கும் பயணிகளின் விவரங்களை எடுத்து அவர்களை தனியே சோதிக்க வேண்டும். சில சாதாரண பயணிகளிடம் கூட தங்கத்தைக் கொடுத்து கடத்தி வந்ததும், அவர்களுக்கு கமிஷன் கொடுத்து தங்கத்தைப் பெற்றுக்கொள்ளும் கும்பலும் செயல்படுவதாக சென்னை, திருச்சி, கொச்சி, திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் அறவுறுத்தியுள்ளனர்.