தங்கம் விலை ராக்கெட் வேகம் - எட்டு மாதங்களில் ₹19,480 உயர்ந்து புதிய உச்சம்!
சென்னையில் கடந்த எட்டு மாதங்களில் தங்கம் விலை ரூ.19,480 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த டிசம்பர் 30, 2024 அன்று ஒரு சவரன் தங்கம் ரூ.57,200 ஆக இருந்தது. ஆனால், ஆகஸ்ட் 30, 2025 அன்று அதன் விலை ரூ.76,680 ஆக உயர்ந்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவு, பணவீக்கம் மற்றும் மத்திய வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்வது போன்ற காரணங்களால் இந்த தொடர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.75,000 ஐத் தாண்டிய நிலையில், தற்போது ரூ.76,000 ஐத் தாண்டியுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு கிராமுக்கு ரூ.390 மற்றும் ஒரு சவரனுக்கு ரூ.3,120 உயர்ந்துள்ளது.
நடப்பாண்டில் தங்கம் விலை உயர்ந்து வந்த பாதை:
நாள் - விலை (ஒரு பவுன்)
ஜனவரி 1 - ₹57,200
ஜனவரி 22 - ₹60,200
மார்ச் 14 - ₹66,400
ஏப்ரல் 12 - ₹70,160
ஜூலை 23 - ₹75,040
ஆகஸ்ட் 29 - ₹76,680
தங்கத்தின் விலையைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ வெள்ளி கடந்த 10 நாட்களில் ரூ.1,000 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு, பண்டிகை காலங்களில் நகைகள் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும்.