தொடர்ந்து 3 வது நாளாக உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன?
தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் 2024 மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதனை தொடர்ந்து கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது.
இந்த சூழலில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்த நிலையில் இன்று மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.58 ஆயிரத்து 280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.7 ஆயிரத்து 285-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பங்குச்சந்தை விபரம் :
கடந்த இரண்டு நாட்களாக உள்நாட்டு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர் சரிவைச் சந்தித்தது. ஆரம்ப வர்த்தகத்தில் 30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் 270.76 புள்ளிகள் உயர்ந்து 77 ஆயிரத்து 890.97 ஆகவும், என்எஸ்இயின் நிஃப்டி 69.5 புள்ளிகள் உயர்ந்து 23 ஆயிரத்து 596 ஆகவும் முடிந்தது.
இருப்பினும், இரண்டு பெஞ்ச்மார்க் குறியீடுகளும் விரைவில் எதிர்மறையான நிலைக்குச் சென்றன. இந்த நிலையில் இன்று சென்செக்ஸ் 413.52 அல்லது 0.53% குறைந்து 77 ஆயிரத்து 206.69 ஆகவும், நிஃப்டி 50 புள்ளிகள் குறைந்து 23,400 க்கு கீழ் வர்த்தகம் செய்யப்பட்டது. இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.