தொடர்ந்து சரியும் தங்கம் விலை…3 நாட்களில் ரூ.3,280 குறைவு!
பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்கவரி குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்றே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3280 குறைந்துள்ளது.
மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட 2024-2025 மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் மீதான இறக்குமதி வரி குறைப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதையடுத்து, அடுத்த சில மணி நேரங்களில் தங்கத்தின் விலை சரியத் தொடங்கியது. அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.260 குறைந்து ஒரு கிராம் ரூ.6,550க்கும், சவரனுக்கு ரூ.2,080 குறைந்து ஒரு சவரன் ரூ.52,400க்கும் விற்பனையானது.
இதேபோல், நேற்றும் தங்கத்தின் விலை குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.6,490-க்கும், சவரனுக்கு 720 குறைந்து ரூ.51,920-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதைபோல், வெள்ளி விலையும் 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.92 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.92,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.6,430-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ. 51,440 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அந்த வகையில், தங்கம் விலை மூன்றே நாட்களில் ரூ.3280 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவது பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.