வங்கதேச காளி கோயிலுக்கு பிரதமர் மோடி பரிசாக அளித்த தங்க கிரீடம் திருட்டு!
வங்கதேசத்தில் அமைந்துள்ள ஜேஷோரேஸ்வரி காளி கோயிலுக்கு, இந்திய நாட்டின் பரிசாக, பிரதமர் நரேந்திர மோடியால் வழங்கப்பட்ட தங்கக் கிரீடம் திருடப்போயுள்ளது.
வங்கதேசத்துக்கு கடந்த 2021ஆம் ஆண்டு அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தபோது காளி கோயிலுக்கு தங்கக் கிரீடத்தை பரிசாக வழங்கினார். இந்நிலையில் நேற்று (10.10.2024) அந்த கோயிலில் பூஜை செய்துவிட்டு, பூட்டிச்சென்ற நிலையில், இன்று (11.10.2024) காலை கோயிலில், சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு இருந்த தங்கத்தால் ஆன கிரீடம் திருடப்பட்டிருப்பதை அறிந்த கோயில் அர்ச்சகர் காவல்துறையினருக்குப் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், கோயிலில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், கிரீடத்தை ஒருவர் திருடிச்செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர் பற்றி விரைவாக விசாரணை நடத்தும்படி இந்தியா தரப்பிலும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கோயிலின் கருவறைக்குள் நுழையும் ஒருவர், காளியின் தலையில் இருந்த கிரீடத்தை எடுத்து தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வெளியேறுவது சிசிடிவில் பதிவாகியுள்ளது. இதனை அடிப்படையாக வைத்து குற்றவாளியை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.