பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பாம்புக்கோவில் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சுமார் ரூ.4 கோடி வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பிரசித்திபெற்ற பாம்புக் கோவில் ஆட்டுச் சந்தை உள்ளது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மட்டும் நடைபெறும் இந்த ஆட்டுச் சந்தையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆடுகளைக் கொண்டு வந்து வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.
கடந்த சில நாட்களாகக் குறைந்த அளவே வியாபாரிகள் வந்திருந்தனர். வரும் ஜூன் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக முஸ்லீம்கள் குர்பானி கொடுப்பது வழக்கம். தங்கள் உணவின் ஒரு பகுதியை ஏழைகளுக்குக் கொடுப்பது சிறப்பு அம்சமாகும்.
இதற்காக ஆடுகள் வாங்க பல்வேறு பகுதிகளிலிருந்து நேற்று ஏராளமானோர் குவிந்தனர். இதனால் நீண்ட நாட்களுக்குப் பின்னர் பாம்புக் கோவில் ஆட்டுச்சந்தைக் களைகட்டியது. சுமார் ரூ.4 கோடி வரை விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.