#GOAT | விஜய்க்கு சம்பளமே ரூ.200 கோடியா? அர்ச்சனா கல்பாத்தி விளக்கம்!
கோட் படத்தின் பட்ஜெட், விஜய்யின் சம்பளம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேசியுள்ளார்.
லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாக உள்ளது. இது விஜய் அரசியலுக்கு வந்தபிறகு வெளியாகும் முதல் படமாகும். இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர்.
இப்படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது. இந்த சூழலில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் நான்காவது பாடலான ‘மட்ட’ பாடல் நேற்று வெளியாகியது. இப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி உள்ள நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் புரமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில், புரமோஷனுக்காக நேர்காணல் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “பிகில் திரைப்படம் ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவானது. இப்படம் வெளியாகி 5 ஆண்டுகளே ஆனாலும் நடிகர் விஜய்யின் மார்க்கெட் பிரம்மாண்டாக வளர்ந்துள்ளது. 'கோட்' திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், பாதி நடிகர் விஜய்யின் சம்பளம். 'கோட்' மிகப்பெரிய படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் டிஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் பட்ஜெட் அதிகமாகியுள்ளது.”
இவ்வாறு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.