கோலி, ரஜத் படிதார் அரைசதம் - SRH அணிக்கு 207 ரன்கள் இலக்கு!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 207 ரன்களை இலக்காக நிர்ணயத்துள்ளது.
இந்த தொடர் முழுவதும் ஹைதராபாத் அணி எதிரணிகளை திக்குமுக்காடச்செய்து, அதிக ரன்களை அடித்து அபாரமாக விளையாடி வருகிறது. பெங்களூருவுடன் விளையாடிய கடந்த போட்டியில் ஹைதராபாத் அணி 287 ரன்களை குவித்து 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூரு அணி பவுலர்களும் எவ்வளவு ரன்கள் இருந்தாலும் அந்த ஸ்கோரை டிபெண்ட் செய்ய முடியாமல் திணறி வருகிறார்கள். இந்த நிலையில் தான் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத்தை அதன் சொந்த மண்ணிலேயே எதிர்கொண்டது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெசிஸ் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். ஹைதராபாத் அணிக்கு நிச்சயம் இமாலய இலக்கை வைக்க வேண்டும் என்றே பெங்களூரு அணி களமிறங்கியது. அதேபோல ஆரம்பம் முதலே அதிரடி காட்ட தொடங்கினர் விராட் கோலி மற்றும் பாப் டு பிளெசிஸ். ஆனால் 3 பவுண்டர்கள், 1 சிக்சர் என அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த டு பிளெசிஸ், 4ஆவது ஓவரின் கடைசி பந்தில் நடராஜன் வேகத்தில் கேட்ச் கொடுத்த தனது விக்கெட்டை இழந்தார்.
விக் ஜாக்ஸும் 6 ரன்களில் வெளியேற, விராட் கோலி - ரஜத் பட்டிதார் ஜோடி அதிரடி காட்ட தொடங்கியது. 11ஆவது ஓவரில் மட்டும் 3 சிக்சர்கள் அடித்து 26 ரன்கள் எடுத்து அபாரமாக 50 ரன்களை கடந்தார். ஆனால் அடுத்த பந்திலேயே உனத்கட் வேகத்தில் அப்துல் சமதிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி - க்ரீன் ஜோடி பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்தினர். ஆனால் பொறுமையாக விளையாடி அரைசதம் கடந்த விராட் கோலி, 51 ரன்களில் உனட்கட் பவுலிங்கில் ஆட்டமிழக்க, பிறகு வந்த லோமரோர் வந்த வேகத்தில் நடையை கட்டினார்.
அடுத்த வந்த தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டுவார் என்ற ரசிகர்களின் ஆசையை அவர் ஏமாற்றி 11 ரன்களில் வெளியேற, கடைசியாக க்ரீன் மற்றும் ஸ்வப்னில் சிங் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.
ஹைதராபாத் பவுலர்களில் அதிகபட்சமாக உனத்கட் 3 விக்கெட்டுகளும், நடராஜன் 2 விக்கெட்டுகளும் மார்கண்டே மற்றும் பேட் கம்மின்ஸ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனால் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 206 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது.