ஞானவாபி மசூதியில் பூஜை நடத்த தடை விதிக்க அலகாபாத் நீதிமன்றம் மறுப்பு!
வாரணாசியில் ஞானவாபி மசூதியில் பூஜை நடத்துவதற்கு தடை விதிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
உத்தரப்பிரதேச வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி உள்ளது. அந்த மசூதி, கோயிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் வாராணசி நீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதை எதிர்த்து முஸ்லீம்கள் தரப்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மசூதி இந்துக்களின் கோயிலை இடித்துதான் கட்டப்பட்டதா என்பதை அறிய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. தொல்லியல் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், 55 இந்து தெய்வ சிலைகள், தூண்கள் இருந்ததாக அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஞானவாபி மசூதியின் தெற்குப் பகுதியில், பூஜாரி சோம்நாத் வியாசின் குடும்பத்தினர் பூஜைகள் செய்வதற்கு அனுமதி அளித்துள்ள நிலையில், பல தசாப்தங்களுக்கு பிறகு, இந்துக்கள் முதல்முறையாக இன்று (பிப். 2) பாதாள அறையில் வழிபாடு நடத்தினர். வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து முஸ்லிம்கள் தரப்பினர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், வாரணாசி நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், வாரணாசி நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை எதிர்த்து முஸ்லிம் தரப்பினர் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கிய நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால், விசாரணையை பிப்.,6-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதனையடுத்து, அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக ஞானவாபி மசூதியை சுற்றி துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.