உலகளவில் கவனம் பெறும் நடிகர் சூரி - பெர்லின் சர்வதேச விழாவில் திரையிடப்படும் “கொட்டுக்காளி” திரைப்படம்!
வினோத்ராஜ் இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக நடித்து வந்த சூரியை வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக ஆக்கினார். அந்த படத்தை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து சூரி தொடர்ந்து கதாநாயகனாகவே சில படங்களில் நடித்து வருகிறார்.
இதனிடையே நிவின் பாலி நடித்து ராம் இயக்கியிருக்கும் ஏழு கடல் ஏழு மலை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார். தொடர்ந்து விடுதலை 2 மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்களை முடித்த சூரி அடுத்து நடிக்கும் கருடன் படத்தை இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்குகிறார். இந்த படத்துக்குக் கதையை இயக்குநர் வெற்றிமாறன் எழுதியுள்ளார்.
அண்மையில், Rotterdam நகரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட திரையிடல் விழாவில் நடிகர் சூரி நடித்துள்ள விடுதலை ஒன்று மற்றும் இரண்டு பாகங்கள் திரையிடப்பட்டன. படத்தை பார்த்துவிட்டு பார்வையாளர்கள் எழுந்து நின்று 5 நிமிடங்கள் கைதட்டினர். இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகியோர் பாரம்பரிய உடையான வேஷ்டி அணிந்து கலந்து கொண்டனர்.
வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் கொட்டுக்காளி. இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் சூரி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் இந்த பிப்ரவரி மாதம் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெர்லினில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட இந்த திரைப்படம் தேர்வானது.
இந்நிலையில் வருகின்ற பிப்ரவரி 16-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 5 சிறப்பு காட்சிகளாக கொட்டுக்காளி திரைப்படம் மெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.