ஜெர்மன் பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மேன் பாடிய "ராம் ஆயங்கே" வீடியோ வைரல்!
அயோத்தியின் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, ஜெர்மன் பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மேன், பாடிய "ராம் ஆயங்கே" என்ற பக்தி பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, ஜெர்மன் பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மேன், "ராம் ஆயங்கே" (ராமர் குறித்த பாடல்) என்ற பக்தி பாடலைப் பாடியுள்ளார். இந்தப் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று பதிவிடப்பட்ட இந்த வீடியோ இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்துள்ளது. 10,000க்கும் மேற்பட்ட கருத்துகளை பெற்றுள்ளது. இது ஜெர்மனிக்கும், இந்தியாவிற்கும் இடையில் இருக்கும் கலாச்சார பிணைப்பை வலியுறுத்துவதாக உள்ளதாகவும் பலர் கூறியுள்ளனர்.