10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நிறைவு! மே 10-ந் தேதி முடிவு!
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைந்த நிலையில், மே. 10 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்.1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து மார்ச் 4 ஆம் தேதி தொடங்கிய 11-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு 25 ஆம் தேதி முடிவடைந்தது. அதேபோல 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வும் தொடங்கி நடைபெற்று வருகிறது. மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய தேர்வு இன்றுடன் நிறைவடைகிறது.
இதையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப். 12 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தேர்வு முடிவுகள் மே. 10 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது;
“மாணவர்களின் விடைத்தாள்கள் 118 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கிருந்து திருத்துதல் மையங்களுக்கு ஏப். 10 முதல் அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து, ஏப். 12 முதல் 22-ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்துதல் பணிகள் நடைபெறவுள்ளன. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 88 தேர்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளில் சுமார் 50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தொடர்ந்து, மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 10-ஆம் தேதி வெளியிடப்படும். திருத்துதலின்போது ஆசிரியர்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றி கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளனர்.