எகிப்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் இன்று காசா அமைதி உச்சி மாநாடு!
கடந்த 2023 முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வந்தது. இந்த போரில் காசாவைச் சேர்ந்த 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இஸ்ரேலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் உணவு கிடைக்காமலும், ஊட்டச் சத்து குறைபாட்டாலும் காசாவில் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. சர்வதேச நாடுகள் இஸ்ரேலை கடுமையாக விமர்சித்து வந்தன.
இதற்கிடையே, இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சியின்பேரில் எகிப்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அதன் முடிவில் முதல்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. போர் நிறுத்த ஒப்பந்தப்படி இரு தரப்பும் இன்று (அக்.13) பணயக்கைதிகளை விடுவிக்கின்றனர். மேலும், காசாவுக்கு நிவாரண உதவிகள் சென்றடைவதற்காக 5 எல்லைகளை இஸ்ரேல் திறக்க உள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல்-சிசி ஆகியோர் தலைமையில் எகிப்தின் ஷர்ம்-எல்-ஷேக் நகரில் அமைதி உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில், காசாவில் அமைதி ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று (அக்.13) அதிகாரப்பூர்வமாக கையெழுத்து போடப்படுகிறது. இந்த மாநாட்டில் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பதிலாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்திவர்தன் சிங் இந்தியா சார்பில் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.