காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் கருடசேவை உற்சவம் கோலாகலம்!
காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில், வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் மூன்றாம் நாளான இன்று கருடசேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க கருட வாகனத்தின் மீது உற்சவர் வரதராஜப் பெருமாள் எழுந்தருளினார்.
தொடர்ந்து வரதராஜ பெருமாள் விளக்கடி கோயில் தெருவில் ஸ்ரீதூப்புல் வேதாந்த தேசிகர் சன்னதிக்கு சென்ற பெருமாளுக்கு நைவேத்தியம் மற்றும் சீர்வரிசைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து, பிள்ளையார் பாளையம் வழியாக கச்சபேஸ்வரர் கோயிலை அடையும் பெருமாளுக்கு குடை மரியாதை வழங்கும் நிகழ்ச்சியும், புதிய குடைகளுடன், சங்கர மடம் அருகே உள்ள வாகன மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கமாக உள்ளது. அதனை தொடர்ந்து ராஜ வீதிகள் வழியாக நடக்கும் வீதியுலா பிற்பகலில் முடிவடையும்.
பெருமாள் செல்லும் வழிகள் மற்றும் நகரம் முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்து வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.