#Kanguva திரைப்பட எடிட்டர் நிஷாத் யூசுப் மர்ம மரணம்! அதிர்ச்சியில் படக்குழு!
கங்குவா திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் நிஷாத் யூசூப், அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இயக்குநர் சிறுத்தை சிவா நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், நவ. 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்படத்துக்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் படத்தொகுப்பாளர் நிஷாத் யூசூப், கொச்சியில் உள்ள அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 43 வயதாகும் நிஷாத், மலையாளம் மற்றும் தமிழ் மொழித் திரைப்படங்களுக்கு படத் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2022ஆம் ஆண்டு தல்லுமாலா படத்துக்காக சிறந்த படத்தொகுப்பாளருக்கான மாநில விருது நிஷாத்துக்கு வழங்கப்பட்டது. மேலும், உண்டா, ஒன், சௌதி வெள்ளக்கா மற்றும் அடியோஸ் அமிகோஸ் உள்ளிட்ட பிரபல திரைப்படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
சூர்யாவின் கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து, சூர்யா 45, மம்முட்டி மற்றும் மோகன்லால் நடிக்கும் திரைப்படங்களில் பணியாற்ற நிஷாத் ஒப்பந்தம் ஆகியிருந்தார். இந்நிலையில் கொச்சியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் நிஷாத் யூசுப் இன்று அதிகாலை உயிரிழந்து கிடந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தற்கொலையா அல்லது கொலையா என்னும் கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கெனவே கங்குவா திரைப்படத்தின் கலை இயக்குநர் மிலன் உயிரிழந்த நிலையில், படத் தொகுப்பாளரும் தற்போது மரணமடைந்துள்ளார். விடாமுயற்சி திரைப்படத்தின் பணிகளுக்காக அபர்பைஜான் சென்றிருந்த மிலன், அங்கு மாரடைப்பால் உயிரிழந்தார்.