ஓடிடியில் வெளியானது சுந்தர்.சி-யின் ‘கேங்கர்ஸ்’!
தமிழ் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சுந்தர் சி. இவர் மறைந்த பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் 1995-ஆம் ஆண்டு முறை மாமன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சுந்தர் சி. காமடி கலந்த படங்களை இயக்குவதில் இவர் பெயர் போனவர்.
நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், சத்யராஜ், சரத்குமார், கார்த்திக் என பெரிய நடிகர்களை இயக்கி பல வெற்றிப் படங்களை இவர் கொடுத்துள்ளார். குறிப்பாக இவர் இயக்கிய அருணாச்சலம், அன்பே சிவம் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இயக்குநராக மட்டும் இல்லாமல் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இவர் சமீப காலமாக திகில் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார். சுந்தர்.சி தற்போது ‘ஒன் 2 ஒன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, சுந்தர்.சி நடிகர் வடிவேலுவை வைத்து புதிய ‘கேங்கர்ஸ்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் சுந்தர். சி உடன் இணைந்து கேத்ரீன் தெரசா, வடிவேலு, வாணி போஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நகைச்சுவைத் திரைப்படமாக உருவான இப்படம் கடந்த ஏப். 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில், இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.