மூன்று சிறுமிகள் உட்பட 4 பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை - சிறுவர் உட்பட 7 பேர் கைது!
மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில், 15, 16 மற்றும் 17 வயதுடைய 3 சிறுமிகளும், 21 வயதுடைய பெண்ணும் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுவிட்டு ஆண் ஒருவருடன் வீடு திரும்பியுள்ளனர். அப்போது அங்கு பைக்கில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அவர்களை தாக்கியுள்ளது. இதனால் அச்சமடைந்த ஐந்து பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளனர்.
ஆனால் பெண்கள் நான்கு பேரையும் அருகில் இருந்த காட்டிற்கு இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்களுடன் இருந்த ஆண் நபர் அவர்களை மீட்க முயன்ற நிலையில், அவரை அடித்து விரட்டியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர் சென்று போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றத்தில் ஈடுபட்ட 7 பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 18 வயது நிரம்பாதவர். நாங்கள் அனைவரையும் கைது செய்துள்ளோம். தகவல் கிடைத்த ஆறு மணி நேரத்திற்குள் அனைவரும் கைது செய்யப்பட்டனர் என பாலகாட் காவல் கண்காணிப்பாளர் நாகேந்திர சிங் கூறினார். பாதிக்கப்பட்ட பெண்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.