திருடிய புடவைகளை காவல்நிலையத்திற்கு பார்சலில் அனுப்பிய பெண்கள்!- சென்னையில் பரபரப்பு சம்பவம்!
திருடிய புடவைகளை காவல் நிலையத்திற்கு பார்சலில் அனுப்பிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் துணிகளை வாங்குவதற்காக ஏராளமான மக்கள் குவிகின்றனர். மக்கள் கூட்டமாக வரும் இடத்தில் திருடர்களும் வர வாய்ப்பு உள்ளது என்பதற்காக காவல் துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை பெசன்ட் நகர் துணிக்கடை ஒன்றில் கடந்த 2-ஆம் தேதி
புடவை வாங்க வந்த பெண்கள் விலை உயர்ந்த புடவைகளை திருடி சென்றுள்ளனர். இது தொடர்பாக சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் துணிக்கடை சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: தீபாவளி பண்டிகை: சொந்த ஊர்களுக்கு படையெடுத்த சென்னைவாசிகள்!
புடவை வாங்க வந்த பெண்கள் பேசுவது குறித்தும் தோற்றம் வைத்தும் வெளிமாநில பெண்கள் என்பது தெரிய வந்தது. சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது இரண்டு பெண்கள் மறைத்துக் கொண்டும் ஒரு பெண் புடவைகளை யாருக்கும் தெரியாமல் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருக்கிறது.
இதனையடுத்து வெளி மாநிலத்திலிருந்து இதுபோன்று புடவைகளை திருடும் கும்பல்
குறித்து போலீசார் ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநில போலீசாரிடம் புடவைகள்
திருடும் பெண்களின் சிசிடிவி காட்சிகளை அனுப்பி கேட்டுள்ளனர். விசாரணையில்
விஜயவாடாவை சேர்ந்த புடவை திருடும் கும்பல் என்பது தெரிய வந்துள்ளது.
7 பேர் கொண்ட பெண்கள் விழா காலங்களில் நகரங்கள் பலவற்றிற்கும் சென்று
துணிக்கடைகளில் யாருக்கும் தெரியாமல் விலை உயர்ந்த புடவைகளை திருடிச் செல்லும் வழக்கத்தை கொண்டவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. ரூ.30 ஆயிரம் முதல் ரூ.70
ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புடவைகளை திருடி சென்றது விசாரணையில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெசன்ட் நகரில் உள்ள கடையில் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள துணிகள் திருடு போனதாக மட்டுமே புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்கு பண்டல் பண்டலாக பார்சல் வந்தது. திடீரென பார்சல் வந்ததை பார்த்த சாஸ்திரி நகர் போலீசார் தீபாவளி பரிசாக யாரும் அனுப்பியுள்ளார்களா என பிரித்துப் பார்த்துள்ளனர்.
பார்சலை பிரித்து பார்க்கும் பொழுது விலை உயர்ந்த புடவைகள் இருப்பது கண்டு குழப்பம் அடைந்தனர். தீபாவளிக்காக விலை உயர்ந்த புடவைகளை காவல் நிலையத்திற்கு பரிசாக அனுப்பியுள்ளார்களோ என்ற கோணத்தில் எல்லாம் காவல்துறையினர் யோசித்து கொண்டிருக்கும் போது விஜயவாடா போலீசார் அந்த பார்சல் குறித்த தகவல் தெரிவித்துள்ளனர்.
புடவை திருடும் கும்பலைப் பிடிக்க சென்னை போலீஸார் விஜயவாடா வர இருப்பதை அறிந்த அந்த கும்பல், திருடிய புடவைகளை சாஸ்திரி நகர் காவல்நிலையத்திற்கு பார்சலில் அனுப்பி இருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.