தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி!
நாடு முழுவதும் இன்று வெகுவிமரிசையாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் பல பகுதிகளின் கோலாகலமாக நடைபெற்ற சிலவற்றை இங்கு காண்போம்....
இன்று நாடு முழுவதும் விநாயகரின் பிறந்த தினமாக கருதப்படும்
விநாயகர் சதூர்த்தி விழாவினை பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதூர்த்தி விழாவில்,
விநாயகரின் சிலைகளை வாங்கி சென்று, வீட்டில் வைத்து வழிபாடு செய்து மூன்றாம்
நாளில் அருகில் உள்ள நீர் நிலைகளில் கரைத்து கொண்டாடுவது வழக்கம். இன்று தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் கோலாகலமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. அதில் சிலவற்றை இங்கு காணலாம்.
சென்னை
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை தியாகராய நகர் சிஐடி காலனியில், இனிப்பு பிள்ளையார் செய்யப்பட்டிருக்கிறது. முந்திரி, பொட்டுக்கடலை, சர்க்கரை, வேர்க்கடலை, மைதா திராட்சை என 250 கிலோ அடங்கிய பொருட்களை வைத்து விநாயகர் சிலை செய்யப்பட்டு, வழிபாடு நடந்தது.
காஞ்சிபுரம்
விநாயகர் சதுர்த்தியான இன்று, கோயில் நகரமான காஞ்சிபுரத்தில், காமாட்சி அம்மன் தெருவில் உள்ள ஏலேல சிங்க விநாயகர் கோயிலில் ரூ.20லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளால் கோவில் கருவறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த விநாயகரை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் வித்தியாசமாக மரத்தில் வரையப்பட்டிருக்கும் விநாயகர்.
மதுரை
உலக பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தேரசுவரர் திருக்கோயிலில் உள்ள, 11 அடி உயரம் கொண்ட முக்குறுணி விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொழுக்கட்டை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயில் முக்குறுணி விநாயகருக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. மேலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அருகம்புல் மாலை, மலர் மாலைகள் சாற்றப்பட்டு விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து 18 படி பச்சரிசி மாவு, வெல்லம், தேங்காய், நெய், முந்திரி, ஜாதிக்காய், கிராம்பு, ஏலக்காய், சர்க்கரை, எள் கலந்து செய்யப்பட்ட கொழுக்கட்டை விநாயகருக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீமணக்குள விநாயகர் கோயிலில் மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மணக்குள விநாயகரை தரிசனம் செய்தனர்.
கடலூரில் உள்ள இனிப்புக் கடை ஒன்றில் 72 கிலோ எடை கொண்ட லட்டு பிள்ளையார் பிரதிஷ்டை செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் விஜய், வினய். இவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கடலூரில் இனிப்பு வகைகளை தயாரித்து விற்பனை செய்து
வருகிறார்கள். ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, பிரம்மாண்டமான
லட்டு பிள்ளையார் தயாரித்து, சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
அதன்படி நிகழாண்டு, சதுர்த்தி நாளான இன்று 72 கிலோவில் லட்டு பிள்ளையாரை தங்களது கடையில் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜை நடத்தினர்.