‘டிடிஎஃப் வாசன்’ முதல் ‘தாயுமான தயாளன்’ வரை... 2023-ம் ஆண்டில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தவர்கள்!
தமிழ்நாட்டில் மிகவும் வேகமாக பிரபலம் அடைந்து, சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்தவர்களை பற்றி காணலாம்...
12-ம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவி நந்தினி
தமிழ்நாடு முழுவதும் கடந்த கல்வியாண்டில் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வில், இதற்கு முன்பு நடக்காதது போல், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி என்ற மாணவி 600க்கு 600 என முழு மதிப்பெண்களையும் பெற்றார். அவருக்கு சமூக ஊடகங்களிலும் நேரிலும் வாழ்த்துகள் குவிந்தன. அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த அந்த மாணவி, ‘படிப்புதான் சொத்து’ என்பதை உணர்ந்து கவனத்துடன் படித்ததாக ஊடக பேட்டிகளில் தெரிவித்தார். அவரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
நந்தினி, ’பாடங்களை மனப்பாடம் செய்யாமல், அவற்றைப் புரிந்து படித்ததே’ தன்னுடைய சாதனைக்குக் காரணம் என்றும் தெரிவித்திருந்தார். முழு மதிப்பெண்கள் பெற்றதன் மூலம் சமூக ஊடகங்களில் மிகுந்த கவனத்தைக் குறுகிய காலத்திலேயே பெற்றார் நந்தினி.
தாயுமான காவலர் தயாளன்
மிக்ஜாம் புயலால் சென்னை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட போது, மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. அப்போது சென்னை துரைப்பாக்கம் விபிஜி அவென்யூ பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை காவல்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். அப்போது, காவலர் ஒருவர் குழந்தையை அரவணைத்தபடி, புன்சிரிப்போடு தேங்கியுள்ள மழை நீரில் நடந்து சென்ற புகைப்படம் இணையத்தில் பரவி, அனைவரையும் நெகிழச் செய்தது. மீசையுடன் கம்பீரமாக இருக்கும் காவலர், சிறு குழந்தையைப் பார்த்துச் சிரித்த புகைப்படம், சென்னை வெள்ள துயரத்தை மறந்து, அனைவரையும் ரசிக்கச் செய்தது.
இந்நிலையில், அந்த காவலரின் பெயர் தயாளன் எனத் தகவல் வெளியானது. நூற்றுக்கணக்கானோரை, மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றியுள்ள தயாளன், குழந்தையுடனான சிரிப்புடன் ஒற்றைப் புகைப்படத்தின் மூலம் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்து விட்டார்.
அப்போது, குழந்தை தன்னைப் பார்த்து சிரித்ததால், நானும் குழந்தையைப் பார்த்து சிரித்தேன். குழந்தையின் சிரிப்பை பார்த்தவுடன் 4 நாட்களாக மழை வெள்ளத்திற்கு மத்தியில் தொடர்ந்து பணியாற்றிய களைப்பு பறந்து போய்விட்டது, யதார்த்தமாக நடந்த இந்த நிகழ்வின் போது எடுத்த படம் இந்த அளவுக்குப் பரவும் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை எனக் கூறினார்.
ரஞ்சனா நாச்சியார்
சென்னை குன்றத்தூரில் இருந்து போரூர் வரை சென்ற அரசு பேருந்தில் மாணவர்கள் தொங்கியபடி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த நடிகையும் வழக்கறிஞருமான ரஞ்சனா நாச்சியார் அரசு பேருந்தை தடுத்து நிறுத்தினார். அப்போது டிரைவரிடம் போய் படிக்கட்டில் இப்படி தொங்கிக் கொண்டு வருகிறார்கள். நீங்கள் கேட்க மாட்டீர்களா என்றார். மேலும் அங்க பாருங்க ஒருத்தன் மேலே ஏறுகிறான் என்றார்.
உடனே பேருந்தின் பின்பக்கம் சென்ற அவர், தொங்கிக் கொண்டிருந்த மாணவர்களை இழுத்து வெளியே தள்ளினார். வர மறுத்த மாணவர்களை அடித்தார், அதிலும் பேருந்து மீது ஏறிய ஒரு பள்ளி மாணவனை சரமாரியாக அடித்தார். மேலும் பள்ளி பேட்ச்சையும் காட்டி அடித்தார். மாணவர்களை நாய், ஏன்டா அறிவில்ல என அழைத்து கடுமையாக கத்தினார். அது படிக்கட்டில் யாரெல்லாம் நிற்கிறார்களோ அவர்களை எல்லாம் இறக்கிவிட்டார்.
மேலும் கன்டக்டரிடம் ஏன் நீங்கள் இதையெல்லாம் கேட்க மாட்டீர்களா? என்று கேள்வி எழுப்பினார். நடிகையும் பாஜக நிர்வாகியுமான ரஞ்சனாவின் செயலுக்கு ஆதரவும் எதிர்ப்பு கிளம்பின. மாணவர்களை அடிப்பதற்கான உரிமையை அவருக்கு யார் கொடுத்தது என்ற ரீதியில் நெட்டிசன்கள் சிலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இருந்தனர்.
டிரைவிங் லைசன்சை பறிகொடுத்த டிடிஎஃப் வாசன்
டிடிஎஃப் வாசன் என்பவர் இருசக்கர வாகன சாகச பயணத்தின் மூலம் யூடியூப்பில் பிரபலமானவராக அறியப்படுகிறார். யூடியூப்பில் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இவர் அடிக்கடி அதிவேகமாக பயணம் செய்து சாகசங்களை மேற்கொண்டு வருவார். அதன்படி, காஞ்சிபுரத்திற்கு அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தன் இருசக்கர வாகனத்தின் முன் சக்கரத்தைத் தூக்கி சாகசம் செய்தார்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 2 முறை தலைகீழாக சுழன்று விழுந்தததில் டிடிஎஃப் வாசன் படுகாயமடைந்தார். மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதற்காக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது, கவனக்குறைவாக செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து 14 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு குறித்து பல்வேறு முறை அவர் ஜாமின் மனு கோரியும், வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் மீண்டும் மீண்டும் உத்தரவிட்டது.
மறக்குமா நெஞ்சம் ஏ.ஆர்.ரஹ்மான்
கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி மாலை சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் உள்ள ஆதித்யராம் பேலஸ் என்ற பகுதியில் "மறக்குமா நெஞ்சம்" என்ற தலைப்பில் அவருடைய இசை நிகழ்ச்சி நடக்கவிருந்தது. மழை காரணமாக அந்த இசைக்கச்சேரி தள்ளி வைக்கப்பட்டது.
இன்றைய தினம் இசைக்கச்சேரி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம் என ரூ.2000 முதல் ரூ. 15 ஆயிரம் வரை பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் இசைக்கச்சேரி நடைபெறும் இடத்திற்கு சென்றனர். அங்கு சென்ற ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றமே மிஞ்சியது. எந்த ஒரு சரியான ஏற்பாடுகள் செய்யவில்லை. பார்க்கிங் வசதியில்லை. சேர் வசதியில்லாமல் பல ரசிகர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பல மணி நேரம் க்யூவில் நிற்க வேண்டியதாகிவிட்டது.
ரூ.15 ஆயிரம் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி மறக்கவே முடியாத அளவிற்கு ஆகி விட்டது ஏஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரி என்று ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். காசு கொடுத்து டிக்கெட் வாங்கி சரியாக இசைக்கச்சேரியை கேட்க முடியவில்லை என்று கதறிய ரசிகர்கள் ஒரு கட்டத்தில் வால்யூம் வேண்டும் என்று கூற கத்த ஆரம்பித்து விட்டனர். சவுண்ட் சிஸ்டம் சரியில்லை என்று பதிவிட்டு கோபத்தை வெளிப்படுத்தினர்.
சாலையில் வாக்கிங் சென்ற முதலை
- திருப்பதி கண்ணன்