“இந்தியன் 2” முதல் “விடாமுயற்சி” வரை - ஓடிடி உரிமத்தை பெற்ற நெட்ஃப்ளிக்ஸ்!
தமிழ் திரையுலகில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 5 படங்களின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநர் ஷங்கர் உடன் கமல்ஹாசன் இரண்டாம் முறையாக இணைந்த திரைப்படம் ‘இந்தியன் 2’. 1996ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகம் பாக்ஸ் ஆஃபிஸில் சக்கை போடு போட்டதுடன், வசூலையும் குவித்து தமிழ் சினிமாவின் பிரபல கமர்ஷியல் படமாக உருவெடுத்தது. கமல்ஹாசன் இப்படத்துக்காக தேசிய விருது வென்றார். இப்படத்தின் இரண்டாம் பாக பணிகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் முதல் பாகத்தை விட இன்னும் பிரம்மாண்டமாகவும் பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடனும் படம் வெளியாக உள்ளது.
அஜித்தின் நடிப்பில் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் என பலர் நடித்து வருகின்றனர். விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்திலிருந்து அவ்வப்போது புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியான வண்ணம் இருக்கின்றன. படம் வெளியாவது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. அண்மையில் இவரது 50-வது திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியானது. அதன்படி விஜய்சேதுபதி நடிக்கும் 50-ஆவது திரைப்படத்தின் டைட்டில் ”மகாராஜா” என அறிவிக்கப்பட்டது. அனுராக் கஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, மம்தா மோகன் தாஸ், முனீஷ்காந்த், சிங்கம்புலி உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடிக்கின்றனர்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணையும் படம் ‘தங்கலான். பா.ரஞ்சித்தின் தனது ‘நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு பிறகு இந்தப் படத்தை இயக்குகிறார். தங்கலான் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 26-ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்தது.
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். SK 21 என்ற டைட்டிலில் உருவாகும் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். மாவீரனைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயன் வித்தியாசமான நடிப்பில் மிரட்டுவார் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படங்களின் ஓடிடி ஆப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படங்கள் திரைக்கு வந்த பிறகு நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.