தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்!
தெலங்கானா முன்னாள் முதலமைச்சரும், பாரத ராஷ்டிர சமிதியின் (பிஆர்எஸ்) தலைவருமான சந்திரசேகர ராவ் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
தெலங்கானா முன்னாள் முதலமைச்சரும், பிஆர்எஸ் கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ் கடந்த வாரம் அவரது பண்ணை வீட்டில் தவறி விழுந்ததில், அவருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டிசம்பர் 8-ம் தேதி இடப்பக்க இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் 6 முதல் 8 வாரங்கள் வரை ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த சந்திரசேகர ராவ் நேற்று (டிச. 15) வீடு திரும்பினார். இதுகுறித்து அவரின் மகளும் பிஆர்எஸ் எம்.எல்.சி.யுமான கவிதா தனது ட்விட்டர் (எக்ஸ்) வலைதள பதிவில்,
“சந்திரசேகா் ராவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதையடுத்து வீடு திரும்பினார். இதுபோன்ற கடினமான சூழலில் அவர் நலமடைய வேண்டி நாடு முழுவதும் இருந்து அன்பை பகிர்ந்த அனைவருக்கும் கே.சி.ஆர் குடும்பத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் பிஆர்எஸ் குடும்பத்தினருக்கும் என்னுடைய நன்றிகலந்த அன்பை தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மருத்துவமனையில் சந்திரசேகா் ராவ் இருந்தபோது அவரை தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, நடிகர்கள் சிரஞ்சீவி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.