தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி காலமானார்
தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி காலமானார். அவருக்கு வயது 96.
தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார்.
இதையும் படியுங்கள்: சீனாவில் வேகமாக பரவும் மர்ம நிமோனியா | WHO எச்சரிக்கை!
உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த 1927 ஏப்., 30ல் பிறந்தார். திருவனந்தபுரம் அரசு சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப்படிப்பை முடித்தார். பின்னர் 1950-ல் வழக்கறிஞராக பணியை துவக்கினார். தொடர்ந்து 1958-ல் கேரள கீழ்நிலை நீதித்துறை பணியில் சேர்ந்த இவர் 1968-ல் துணை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
1972-ல் முதன்மை நீதித்துறை மாஜிஸ்திரேட்டாகவும், 1974-ல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாகவும் பதவி வகித்தார். 1983-ல் கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1989ல் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பதவி வகித்தார். தமிழகத்தின் 11-வது ஆளுநராக கடந்த 1997 முதல் 2001 வரை பதவி வகித்தார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது மத்திய அரசுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தனது பதவியை அவர் ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும், நீதித்துறையில் பெண்களின் முன்னேற்றத்துக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் ஃபாத்திமா பீவி. தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினராகவும் பணியாற்றியவர். பாத்திமா பீவி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.