திருநெல்வேலி டவுணில் முன்னாள் காவல்துறை அதிகாரி வெட்டிக் கொலை!
திருநெல்வேலி டவுண் பகுதியைச் சார்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி. இவர்
காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றதாக தெரிகிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில் அவர்களின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவில் பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது இவர் திருநெல்வேலி டவுணில் உள்ள முர்த்திம் ஜர்கான் தைக்காவில் முத்தவல்லியாக (அறங்காவலர்) செயல்பட்டு வந்துள்ளார். தைக்கா அருகில் உள்ள 36 சென்ட் இடம் தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் இருந்ததாக தெரிகிறது. நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரமலான் நோன்பை துவங்கிய ஜாகிர் உசேன் இன்று காலை தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார். தொழுகை முடித்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது டவுண் காட்சி மண்டபம் அருகே 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டி உள்ளது. ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை செய்துவிட்டு கும்பல் இருசக்கர வாகனத்தில் அங்கு இருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. அவ்வழியாக வந்தவர்கள் ஒருவர் வெட்டுப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து காவல்துறைக்குதகவல் தெரிவித்தனர். திருநெல்வேலி டவுண் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இது குறித்து விசாரணையை துவக்கினர்.
திருநெல்வேலி மாநகர காவல் துறை துணை ஆணையர் கீதா சம்பவ இடத்தில் முகாமிட்டு ஆய்வு செய்தார். உடலை அங்கிருந்து எடுக்க ஜாகிர் உசேன் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இடத்தகராறு காரணமாக ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்திருந்தால் கொலை சம்பவம் நடந்திருக்காது என அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்த நிலையில், உடல் உடற்கூறு பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு
அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பிற்காக
நிறுத்தப்பட்டுள்ளனர். திருநெல்வேலி டவுண் போலீசார் வழக்குப் பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகின்றனர்
காட்சி மண்டபம் அருகே பிரதான சாலையில் உள்ள 36 சென்ட் இடம் தொடர்பாக, ஜாகிர் உசேன் பிஜிலி மற்றும் அதே பகுதியைச் சார்ந்த இஸ்லாமிய பெண்ணை மணம் முடித்த பட்டியலின பிரமுகர் ஒருவர் இடையே தொடர்ந்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதற்கு இடப்பிரச்சனை காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். பரபரப்பாக இயங்கும் திருநெல்வேலி டவுண் பகுதியில் அதிகாலையிலேயே நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.