Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது - முன்னாள் மனைவி பீலா வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை!

11:50 AM May 24, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் காவலாளியை தாக்கி விட்டு பண்ணை வீட்டிற்குள் புகுந்தாக பீலா வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் அவரது முன்னாள் கணவரும், முன்னாள் டிஜிபியுமான ராஜேஷ் தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

கடந்த 2021-ம் ஆண்டு பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி உறுதி செய்தது. இதையடுத்து, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து ஏப்ரல் 23-ம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ராஜேஷ் தாஸ்க்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது எனக் கூறி, விழுப்புரம் நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் ராஜேஷ் தாஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிபதி பேலா திரிவேதி தலைமையிலான அமர்வு, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் புகாரில் ராஜேஷ் தாஸ் சிக்கியவுடன் அவரது மனைவியும், தற்போதைய தமிழக அரசின் எரிசக்தித்துறை செயலாளருமான பீலா அவரை பிரிந்தார். பீலா ராஜேஷ் என்ற பெயரை பீலா வெங்கடேசன் என்று தனது தந்தை பெயருடன் இணைத்து மாற்றிக் கொண்டார். ராஜேஷ் தாசும், பீலாவும் கணவன்-மனைவியாக வாழ்ந்தபோது செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் பண்ணை வீடு வாங்கினார்கள். தற்போது இருவரும் பிரிந்ததால் இந்த பண்ணை வீடு பீலா வெங்கடேசன் நியமித்த காவலாளி கட்டுப்பாட்டில் இருந்துவந்தது.

இதற்கிடையே உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய ராஜேஷ் தாஸ் கடந்த 18-ம் தேதி தையூர் பங்களா வீட்டுக்கு வந்துள்ளார்.  அப்போது அவர் அங்கு பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த காவலாளியை தாக்கி வெளியேற்றியதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு பீலா வெங்கடேசன் புகார் மனு அனுப்பினார். 

அந்த புகாரில், “ராஜேஷ் தாஸ் மற்றும் அடையாளம் தெரியாத 10 நபர்கள் தனக்கு சொந்தமான தையூர் வீட்டின் உள்ளே அத்துமீறி நுழைந்து காவலாளியை தாக்கி செல்போனை பறித்து விட்டு உள்ளே தங்கி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை வெளியேற்ற வேண்டும்” என்று கூறியிருந்தார்.

அதன்பேரில் ராஜேஷ் தாஸ் மற்றும் 10 பேர் மீது கேளம்பாக்கம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸை இன்று கேளம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து காவல்நிலையத்தில் வைத்து ராஜேஸ் தாசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
former Special DGPNews7Tamilnews7TamilUpdatesPeela VenkateshRajesh DasSupreme courtTN Police
Advertisement
Next Article