முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு தினம் - மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி இன்று நடைபெற்றது.
கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி காலமானார். அவரது நினைவு தினத்தை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் திமுக சார்பில் அமைதிப் பேரணி நடத்தப்படுகிறது.
அந்த வகையில், கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு நாள் தமிழ்நாடு முழுவதும் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இன்று காலை திருச்சியில் கருணாநிதி சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.
பின்னர் சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் கருணாநிதி சிலைக்கு கீழே வைக்கப்பட்ட உருவப்படத்துக்கு முதல்வர் ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து சென்னை வாலஜா சாலையில் இருந்து கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உளிட்ட ஆயிரக்கணக்கான திமுகவினர் நடந்து வந்தனர்.