சத்தியமங்கலம் வனப்பகுதி நீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் வனத்துறை - விலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை!
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நிலவும் கடும் வறட்சியால் வனவிலங்குகள் கிராமத்திற்குள் நுழைவதை தடுக்க தண்ணீர் தொட்டிகளில் குடிநீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
1408 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், கடம்பூர், கேர்மாளம், ஆசனூர், தாளவாடி, ஜீரகள்ளி, தலைமலை, பவானிசாகர், விளாமுண்டி, டி.என்.பாளையம் ஆகிய பத்து வனச்சரகங்கள் உள்ளன. கடந்த இரண்டு மாதங்களாக மழை இல்லாமல், வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளது.
இந்த வறட்சியான இரண்டு மாதங்களில் கடம்பூர் மற்றும் தாளவாடி மலைப்பகுதியில் விவசாய தோட்டத்திற்குள் நுழைந்த யானைகள் மூன்று பேரை தாக்கியுள்ளது. அவர்கள் மூவரும் உயிரிழந்துள்ளனர். ஆகையால் வனத்தை விட்டு வனவிலங்குகள் கிராம பகுதிகளுக்குள் புகாமல் தடுக்க, ஏற்கனவே உள்ள தண்ணீர் தொட்டிகளில், லாரிகளில் தண்ணீரை கொண்டு சென்று அதில் நிரப்பி வருகின்றனர்.
இதன் மூலம் வன விலங்குகளுக்கு குடிதண்ணீர் பற்றாக்குறையை போக்குவதோடு, மனித விலங்குகள் மோதல் நடைபெறாமல் தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.