இந்தியா மீது முதன் முறையாக உலக நாடுகள் நம்பிக்கை - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு !
மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில்,
"வரும் ஆண்டுகளில் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடரும் என்று உலக வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது. அடுத்த 2 ஆண்டுகளுக்கு உலகளவில் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும். உலகளாவிய விண்வெளி நிறுவனங்களுக்கான சிறந்த வினியோக சங்கிலியாக இந்தியா வளர்ந்து வருகிறது.
ஜவுளி, சுற்றுலா மற்றும் தொழில்நுட்ப துறைகள் வரும் ஆண்டுகளில் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவில் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு துறையில் பல வாய்ப்புகள் உள்ளன. முதல் முறையாக முழு உலகமும், இந்தியா மீது நம்பிக்கையுடன் உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் மத்தியபிரதேசம் நிறைய மாற்றங்களை கண்டுள்ளது. மின்சாரம், தண்ணீர் தொடர்பான பிரச்சினைகள் இருந்தன. சட்டம்- ஒழுங்கு இன்னும் மோசமாக இருந்தது. இதுபோன்ற சூழ்நிலையில் தொழில் துறை வளர்ச்சி கடினமாக இருந்தது. ஆனால் இன்று வலுவான திறமையாளர்கள் குழு, செழித்து வளரும் தொழில்களுடன் மத்தியபிரதேசம் விருப்பமான வணிக இடமாக மாறி வருகிறது.
மாநிலத்தில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம். மாநிலத்தில் பாஜக அரசு அமைக்கப்பட்ட பிறகு வளர்ச்சி வேகம் இரட்டிப்பாகி இருக்கிறது. இந்தியாவின் மின்சார வாகன புரட்சியில் முன்னணி மாநிலங்களில் மத்திய பிரதேசம் ஒன்றாகும்". இவ்வாறு அவர் கூறினார்.