முதல்முறையாக அனைத்து கட்சி போராட்டத்தில் பங்கேற்ற த.வெ.க!
சிவகங்கையை அடுத்துள்ள வேம்பங்குடி கிராமத்தில் கிராவல் மணல் குவாரி அமைக்க அனுமதி பெற்று, அளுங்கட்சி மற்றும் அதிகாரிகள் உதவியுடனும் பல்வேறு பகுதிகளில் 100 அடி ஆழத்திற்கும் அதிகமாக மணல் கொள்ளை நடைபெற்றதாக அண்மையில் புகார் எழுந்தது.
இதுகுறித்து புகாரளித்தது தொடர்பாக இரு தரப்பினரிடையே கைக்கலப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஒரு தரப்பினரின் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஆளும் கட்சி ஆதரவு மற்றும் அதிகாரிகளின் ஆதரவோடு நடைபெறும் இந்த கனிமவளக்கொள்ளையை கண்டித்து இன்று சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு தமிழக வெற்றிக் கழகம், அதிமுக, பா.ஜ.க, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பாக உண்ணா விரத போராட்டம் நடைபெற்றது.
இதில் அனைத்து கட்சியை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழக வெற்றிக் கழகம் துவங்கப்பட்டு சிறிது நாட்களே ஆகும் நிலையில், அனைத்து கட்சி போராட்டத்தில் முதல்முறையாக த.வெ.கவினர் பங்கேற்றனர்.
தவெக ஆளும் கட்சிக்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்த முதல் போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.