சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேரோட்டம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா இன்று காலை தொடங்கியது.இதையடுத்து, மும்மூர்த்திகளை நோக்கி மாயாசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், இத்தலத்தில் தன்னை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு எல்லா விதமான நன்மைகளும் கிடைக்க மாரியம்மன் பக்தர்களுக்காக 28 நாட்கள் விரதம் இருப்பது சிறப்பம்சமாகும்.
இதையும் படியுங்கள் : “மாற்றத்தை யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்களுக்கான ஒரே கட்சி பாஜக தான்” - அண்ணாமலை பேட்டி!
ஆண்டு தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை அம்மன் விரதம் இருப்பார். இதற்கு பச்சைப் பட்டினி விரதம் என பக்தர்கள் அழைக்கின்றனர். இந்த 28 நாட்களும் திருகோயிலில் அம்மனுக்கு தளிகை நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு நீர்மோர், பானகம், மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக செய்யப்படுகிறது.
இதையடுத்து, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜனம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் பூஜைகளோடு இன்று காலை 7.15 மணியளவில் மீன லக்னத்தில் அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு, பூஜைகளுக்கு பிறகு திருக்கோயில் இணை ஆணையர் சி. கல்யாணி தலைமையில் பக்தர்கள் பூதட்டுகளுடன் ஊர்வலமாக திருக்கோயிலை வலம் வந்து, அம்மனுக்கு பூக்கள் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பூக்கள் கொண்டு வந்தனர்.
பூச்சொரிதல் விழாவிற்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தலைமையில் ஏடிஎஸ்பிக்கள், டி.எஸ்.பிக்கள் என 1300 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.