உதகை மலர் கண்காட்சியை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகை மூடல்!
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே மாதம் நடைபெறும் மலர்கண்காட்சியை முன்னிட்டு அங்குள்ள கண்ணாடி மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் கோடை காலங்களில் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர்.
இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை கவர உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில், கோடை காலத்தில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், வரும் மே மாதம் மலர்கண்காட்சி நடைபெறவுள்ளது.
இதற்காக பூங்காவில் 15,000 மலர் தொட்டிகளில் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு
பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு கண்ணாடி மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் பூங்காவில் உள்ள புல்வெளி மைதானங்களில் உரம் கலந்த மண்ணை தூவும் பணியிலும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.