ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 17,000 கனஅடியாக குறைவு!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 17,000 கனஅடியாக உள்ளநிலையில், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில், நேற்று முன்தினம் மாலை நீர்வரத்து விநாடிக்கு 6,000 கனஅடியாக இருந்தது. தொடர்ந்து காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. நேற்று பிற்பகலில் விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலை 20,000 கனஅடியாக அதிகரித்தது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டார்.
இதனால் தொடர் விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லுக்கு சென்றிருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் 20,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்றுகாலை 17,000 கனஅடியாக குறைந்துள்ளது. ஆனால் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் இன்றும் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.