பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு - உயிரிழப்பு எண்ணிக்கை 1006 ஆக அதிகரிப்பு!
பாகிஸ்தானில் தொடர் மழையின் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1006 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண் கழகம் (என்.டி.எம்.ஏ.) வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கைபர் பக்துன்குவா, பஞ்சாப், சிந்த் மற்றும் கில்ஜித் -பல்திஸ்தான் மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இவற்றில், கைபர் பக்துன்குவா மாகாணத்தில் வெள்ள பாதிப்பில் சிக்கி 504 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பஞ்சாப் மாகாணத்தில் 304 பேரும், சிந்த் மாகாணத்தில் 80 பேரும் கில்ஜித்-பல்திஸ்தான் மாகாணத்தில் 41 பேரும் உயிரிழந்துள்ளனர். கனமழையால் இதுவரை 275 குழந்தைகள், 163 பெண்கள் மற்றும் 568 ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் வெள்ள பாதிப்பு நிலவரங்களை ஆய்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாட்டில் பணவீக்கம் தற்காலிக அடிப்படையில், அதிகரித்து காணப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.