குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் ‘மிக்ஜாம்’ புயல் டிசம்பர் 5 -ம் தேதி ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனிடையே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை நீடித்து வருகிறது.
அந்த வகையில், தென்காசி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் நேற்று இரவு முதல் கனமழை நீடிக்கிறது. இதனால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு..!
இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.