காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - கர்நாடக நீர்வளத்துறை!
கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 1 முதல் 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலத்திலும் தீவிரம் அடைந்துள்ளது. இந்த தொடர்மழை காரணமாக காவிரி மற்றும் அதன் துணை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காவிரியின் முக்கிய துணை நதியான கபினியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கர்நாடகாவில் உள்ள கபினி அணை நிரம்பியது.
மேலும் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கேஆர்எஸ் அணையும் நிரம்பும் நிலையை எட்டியுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு காரணமாக இந்த இரு அணைகளிலிருந்தும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளது கர்நாடக அரசு. இதனால் தமிழ்நாட்டின் அணைகளிலும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனிடையே, நேற்று இரவு நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 88.120 அடியாக உயர்ந்தது. அணையின் நீர் இருப்பு 50.529 டிஎம்சியாக இருந்தது.
இந்நிலையில், எந்த நேரத்திலும் கர்நாடகா கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 1 லட்சம் கன அடி முதல் 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து 70,098 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 68,825 கன அடியாகவும் உள்ளது. கர்நாடகா நீர்வளத் துறையினர் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90.01 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 23,331 கனஅடியில் இருந்து 28,856 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 52.662 டிஎம்சியாக உள்ளது.