“மல பாக்டீரியாக்கள் அதிகளவில் உள்ளது... கும்பமேளா நீர் குளிப்பதற்கு ஏற்றது அல்ல” - மாசு கட்டுப்பாட்டு வாரியம்!
உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் கும்பமேளா நிகழ்வு நடைபெற்று வருகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வாக கருதப்படும் இக்கும்பமேளாவில் இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தா்கள் வருகை தந்து, புனித நீராடி வருகின்றனா்.
இதுவரை 54 கோடிக்கும் மேற்பட்டோா் புனித நீராடியுள்ளனா். இந்நிலையில் இதுதொடர்பாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “திரிவேணி சங்கம கங்கை நீர் குளிப்பதற்கு பாதுகாப்பானது இல்லை” என்று தரவுகள் தெரிவிக்கிறது. நீரின் தன்மையை தீர்மானிக்கும் பிஓடி அளவு (உயிரி ஆக்ஸிஜன் தேவை) நீரில் தற்போது குறிப்பிட்ட அளவை விட அதிகமாக உள்ளது. 'பிஓடி' என்பது நீரில் இயற்கை கழிவுகளின் அளவு அதிகரிப்பால், நுண்ணுயிா் பெருக்கம் அதிகமுள்ளதை குறிக்கிறது. ஒரு லிட்டருக்கு 3 மில்லி கிராமுக்கு குறைவான ‘பிஓடி’ அளவு இருப்பதே குளிப்பதற்கு பாதுகாப்பானதாகும்.
தினமும் 1.6 கோடி லிட்டா் அளவில் மனிதக் கழிவுகளும், 24 கோடி லிட்டா் அளவில் பிற கழிவு நீரும் உருவாகும் நிலையில், கங்கை நீா் குளிப்பதற்கு பாதுகாப்பதானதாக இல்லை என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரவுகள் தெரிவித்துள்ளன. திரிவேணி சங்கமத்தில் நீரின் தரம் குறித்த கவலைகள் எழுந்துள்ள நிலையில், இது தொடா்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.