முதல் டி20 போட்டி | தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இதையடுத்து, தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி கட்டாக் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் அடித்தது. ஹர்திக் பாண்டியா 59 ரன்களுடனும், ஜிதேஷ் சர்மா 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி 3 விக்கெட்டுகளும், லுதோ சிபாம்லா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க வீரர் டி காக் டக் அவுட் ஆகி வெளியேறினார். தொடர்ந்து, ஸ்டப்ஸ் 14 ரன்களிளிலும், மார்க்ரம் 14 ரன்களிலும் வெளியேறினர். பின்னர் வந்த டேவிட் மில்லர் 1 ரன்னிலும், டோனோவன் பெரீரா 5 ரன்களிலும், மார்கோ ஜான்சன் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 12.3 ஓவர்களில் 74 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 101 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளும், ஹர்திக், துபே மற்றும் அக்சர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.