காட்டிக் கொடுத்த தீவிபத்து - டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக் கட்டாக சிக்கிய பணம்!
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின், டெல்லி துக்ளக் சாலையில் உள்ள வீட்டில் கடந்த 14ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதுதொடர்பாக அவரின் குடும்பத்தினர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கட்டுகட்டாக பணம் தீப்பிடித்து எரிவதையும், மற்றொரு அறையில் ஏராளமான பணம் குவிக்கப்பட்டிருப்பதையும் தீயணைப்புத் துறையினர் பார்த்துள்ளனர். தீவிபத்தின் போது நீதிபதி வீட்டில் இல்லை. இதைத்தொடர்ந்து, டெல்லி காவல்துறை உள்துறை அமைச்சகத்திற்கு இதுகுளித்து தகவல் அளித்தது. உள்துறை அமைச்சகம் தலைமை நீதிபதிக்கு அறிக்கை அனுப்பியது.
தீவிபத்தின் போது ரூ.11 கோடி மதிப்பிலான பணக்கட்டுகள் எரிந்து நாசமானதாகவும், மேலும் அவரது வீட்டில் மொத்தம் ரூ.37 கோடி பணம் இருந்ததும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக நீதிபதி யஷ்வந்த் வர்மா எந்த விளக்கமும் அளிக்கததால், ஐந்து நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற கொலீஜியம் அவரை டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருந்து அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான கொலீஜியம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 2021 அக்டோபரில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நியமிக்கப்படுவதற்கு முன்பு அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில்தான் பணியாற்றினார்.
இருப்பினும், இவ்வளவு பெரிய வழக்கில் நீதிபதியை இடமாற்றம் செய்வது மட்டும் போதாது என்று கொலீஜியத்தின் சில உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறினால் நீதித்துறையின் நம்பகத்தன்மைக்கு களங்கம் ஏற்படும் என்றும், நீதிமன்றத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை உடைந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
1999ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கொண்டுவந்த நடைமுறையின்படி, ஒரு நீதிபதிக்கு எதிராக புகார் பெறப்பட்டால், தலைமை நீதிபதி முதலில் சம்பந்தப்பட்ட நீதிபதியிடமிருந்து விவகாரம் தொடர்பான விளக்கத்தை பெறுவார். குற்றம் சாட்டப்பட்ட நீதிபதியின் பதிலில் அதிருப்தி அடைந்தாலோ அல்லது இந்த விவகாரத்தில் மேலும் விசாரணை தேவை என்று கருதினாலோ, தலைமை நீதிபதி ஒரு உள் குழுவை அமைப்பார்.
விசாரணையில் ஊழல், தவறு, நிதி முறைகேட்டில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டால், நீதிபதியை நீக்க வேண்டும் என்று குழு கருதினால் நீதிபதியை ராஜினாமா செய்யச் சொல்லும்.