ஈபிள் டவரில் மளமளவென பரவிய தீ - சுற்றுலா பயணிகளுக்கு தடை!
பாரிஸில் உள்ள ஈபிள் டவரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
பாரிஸில் உள்ள உலக புகழ்பெற்ற ஈபிள் டவரை நாள் ஒன்றுக்கு சுமார் 15,000 முதல் 25,000 சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக ஈபிள் டவரில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.
அப்போது ஈபிள் டவரில் உள்ள லிஃப்ட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து காரணமாக ஈபிள் டவர் பகுதியில் கூடியிருந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள், உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், லிஃப்ட் கேபிள்கள் சூடாகி தீப்பிடித்துள்ளது தெரிய வந்துள்ளது. அது அப்படியே பரவி மொத்தமாக டவர் முழுக்க தீ விபத்து ஏற்பட்டது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு மத்தியில் ஈபிள் டவரில் தீ விபத்து ஏற்பட்டு, தடை விதிக்கப்பட்டிருப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பாரீஸ் சென்ற சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.