2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி கூடியது. அன்றைய தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை புறக்கணித்து சென்றாலும், சபாநாயகர் மு.அப்பாவு தமிழில் வாசித்த ஆளுநர் உரை அவைக் குறிப்பில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11-ம் தேதி வரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரையும் இடம்பெற்றது.
அத்துடன் தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (மார்ச் 14) மீண்டும் கூடியது. தொடர்ந்து, 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். முன்னதாக மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மரியாதை செலுத்தினார்.
இதற்கிடையே, தமிழ்நாடு அரசின் மாநில திட்டக் குழு சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25-யை (Economic Survey of Tamil Nadu 2024-25) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நேற்று (மார்ச் 13) வெளியிட்டார். பொருளாதார ஆய்வு அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிடுவது இதுவே முதல்முறை ஆகும். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நாளை (மார்ச் 15) தாக்கல் செய்கிறார்.