'கில்லி' படத்தை திரையில் பார்த்து ரசித்த,படத்தின் இயக்குநர் தரணி மற்றும் இசையமைப்பாளர் வித்யாசாகர்!
'கில்லி' திரைப்படத்தை அத்திரைப்படத்தின் இயக்குநர் தரணி மற்றும் இசையமைப்பாளர் வித்யாசாகர் ஆகியோர் நேரில் திரையில் பார்த்து ரசித்தனர்.
நடிகர் விஜய் ‘லியோ’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோட்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சினிமா வாழ்வில் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனைத் திரைப்படமாக ‘கில்லி’ அமைந்தது. இயக்குநர் தரணி இயக்கத்தில் உருவான திரைப்படம் 2004 ஏப்ரல் 17-ம் தேதி திரைக்கு வந்தது. படம் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இதையும் படியுங்கள் : “தமிழ்நாட்டிற்கு நீதியும் கிடைத்துள்ளது, நிதியும் கிடைத்துள்ளது!” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!
இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள அப்படி போடு, அர்ஜுனரு வில்லு ஆகிய பாடல்கள் இன்றுவரை பலரது விருப்பப் பாடலாக உள்ளது. கில்லி வெளியான போது ஹவுஸ்புல் காட்சிகளுடன் மெகா ஹிட்டானது. இத்திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைய உள்ளதால், இப்படத்தை மறுவெளியீடு செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் 4K டிஜிட்டல் தரத்தில் மீண்டும் ’கில்லி’ திரைப்படம் மறுவெளியீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி, ஏப். 20-ம் தேதி உலகம் முழுவதும் ’கில்லி’ மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சேர்த்து, இப்படம் கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. ’கில்லி’ ரீ ரிலிஸ் ஆனதை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் அனைத்து இடங்களிலும் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். முதல் நாள் மட்டும் கிட்டத்தட்ட 7 கோடி வரை வசூல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 20 ஆம் தேதி வெளியான கில்லி இதுவரை ரூ.20 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியளவில், மறுவெளியீடான திரைப்படம் இவ்வளவு பெரிய தொகையை வசூலிப்பது இதுவே முதல் முறை.
இந்நிலையில், கில்லி’ திரைப்படத்தை ரசிகர்களுடன் இணைந்து ரசிகர்களின் ஆட்டம் பாட்டத்தோடு இந்த திரைப்படத்தின் இயக்குநர் தரணி மற்றும் இசையமைப்பாளர் வித்யாசாகர் ஆகியோர் திரையில் பார்த்து ரசித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.