தொடர் மழையால் நிரம்பிய பில்லூர் அணை - பவானி ஆற்றில் 3வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை!
தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ள காரணத்தால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு 3வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அதைபோல், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பில்லூர் அணையில் இருந்து மூன்றாவது நாளாக 16,000 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. பில்லூர் அணைக்கான நீர் வரத்து 16,000கன அடியாக உள்ள நிலையில், நீரை முழுவதுமாக நான்கு மதகுகள் வழியாக பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : தொடர் மழை | நீலகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
பவானி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் மூன்றாவது நாளாக பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும்,நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.