#Fengal புயல் பாதிப்பு – கடலூர், புதுச்சேரியில் இன்று மத்திய குழு ஆய்வு!
ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து கடலூர், புதுச்சேரியில் இன்று மத்திய குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.
கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவ.29ம் தேதி புயலாக மாறியது. ஃபெஞ்சல் என பெயரிப்பட்டிருந்த இந்த புயல் கடந்த 30ம் தேதி இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இந்த ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
இந்த தொடர் கனமழையால் விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சாலை, ரயில் பாதைகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நேற்று முன்தினம் (டிச.6) சென்னை வந்தது. இக்குழு நேற்று விழுப்புரம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளை நிலங்கள் உள்ள பகுதியில் இறங்கி பயிர் சேதம் குறித்தும், தென்பெண்ணையாற்றின் கரையோர பகுதி பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மீட்கபட்டவர்களிடம் வெள்ளபாதிப்பு குறித்து கேட்டறிந்தனர்.
இந்த நிலையில் மத்தியக்குழுவினர் இன்று (டிச.8) காலை 10 மணியளவில் கடலூர், பண்ருட்டி தாலுகாவில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், புதுச்சேரி மாநிலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களையும் ஆய்வு செய்கின்றனர். அதன்பிறகு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புயல் வெள்ள சேதங்கள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் மத்தியக்குழுவினர் ஆய்வுக்கூட்டம் நடத்துகின்றனர்.
இந்த ஆய்வு முடிந்ததும் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளின் விவரங்களை மத்தியக்குழுவினர் சேகரித்து அதனை அறிக்கையாக தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளனர். இவர்கள் அளிக்கும் அறிக்கையை பொறுத்து தமிழ்நாட்டிற்கு தேவையான கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.