ஆறு சவரன் நகைக்காக பெண் தொழிலாளி அடித்துக் கொலை!
காஞ்சிபுரம் அருகே ஆண்டி சிறுவள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்-- செல்வி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை செய்து வந்த சுரேஷ் உடல்நல குறைவு காரணமாக தொடர்ச்சியாக வேலைக்கு செல்ல முடியாமல் அவ்வப்பொழுது சென்று வந்துள்ளார். இதனால் அவரது மனைவி செல்வி என்கிற எப்சி காஞ்சிபுரம் பொன்னேரி கரை பகுதியில் பிரவீன் குமார் என்பவர் நடத்தி வரும் அட்டைப்பெட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் ஒரு நாளைக்கு 200 ரூபாய் கூலிக்கு வேலை செய்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன் வேலைக்கு சேர்ந்த செல்வி மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அவருடைய கணவர் சுரேஷ் மற்றும் உறவினர்கள் அட்டைப்பெட்டி தயாரிக்கும் நிறுவனத்திற்கு சென்றுள்ளனர். அங்கு வெளிக் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பணிபுரியும் செந்தில் என்பவர் போதையில் படுத்து கிடந்துள்ளார்.
இதையடுத்து சுரேஷும் அவருடைய உறவினரும் கம்பெனி முழுவதும் செல்வியை தேடி உள்ளனர். அப்போது வீணாகும் அட்டைகள் சேமிக்கும் இடத்தில் செல்வி தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். அதனைக் கண்டு கணவர் சுரேஷ் மற்றும்தப்பி சென்றுள்ளார். அதேநேரம் செல்வி அணிந்திருந்த 6 சவரன் நகைகளும் காணவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து பொன்னேரிக்கரை காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பெயரில் காவல்துறையினர் விரைந்து வந்து தடயங்களை சேகரித்து செல்வியின் உடலை உடற்கூறாய்விற்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அட்டை கம்பெனி உரிமையாளர் பிரவீன் குமார், பணியாளர் உள்ளிட்டவர்களை கம்பெனிக்கு வரவைத்து விசாரணை செய்தனர். மேலும் தப்பியோடிய செந்திலையும் தேடி வருகின்றனர். ஆறு சவரன் நகைக்காக பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.